படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற மானியத்துடன் விண்ணப்பிக்கலாம் 
படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சிறுதொழில்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்ட தொழில் மையங்கள் வாயிலாக படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 25 சதவீத மானியமாக ரூ.1.25 லட்சம் உச்சவரம்புடன் சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழிலுக்கு ரூ.5  லட்சமும்,உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.10லட்சமும் உயர்த்தி கடனுதவி வழங்கப்படும். இதற்கு 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களும், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக மாற்ற உதவும்  நோக்கில், புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன வளர்ச்சித்திட்டத்தின் கீழ், உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த நிறுவனங்களுக்கு அதிகபட்சம் ரூ. 30 மானியத்துடன் கடன் வழங்கப்படும். இத்திட்டத்தில் தொழில் முனைவோரின் திட்ட மதிப்பீடு குறைந்தபட்சம் ரூ. 10 லட்சமாக இருக்கவேண்டும். அதிகபட்சம் தொழில் திட்ட மதிப்பீடு வரம்பு ரூ.5கோடியாக இருக்க வேண்டும். இத்திட்டத்தின்மூலம் கடன் பெற விரும்புவோர் முதல் தலைமுறை தொழில்முனைவோராக இருக்க வேண்டும். 21வயது பூர்த்தியடைந்தவராகவும் மற்றும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழில் நுட்ப பயிற்சி வகுப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் 50சதவீத பெண் தொழில்முனைவோர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நேர்முகத்தேர்வு மற்றும் பயிற்சியிலிருந்து விலக்கு...
இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை கடன் வழங்கப்படும் பயனாளிகளுக்கு கரோனோ அச்சுறுத்தல் காரணமாக நேர்முகத்தேர்வு மற்றும் தொழில் முனைவோர் பயிற்சியிலிருந்து தமிழக அரசால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க விரும்புவோர் https://msme.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறலாம். மேலும் விபரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை தொலைபேசி வாயிலாக 044 - 27238837 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். மேலும் புள்ளி விவர ஆய்வாளர் கோ.சண்முகத்தின் 7904559090 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், உதவி பொறியாளர் தாரணியின் 9566990779 என்ற  செல்லிடப்பேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.Check Related Post:0/Post a Comment/Comments

Previous Post Next Post