புதுவையில் பணிபுரியும் மகளிா், கல்லூரி மாணவிகள் 500 பேருக்கு மின்சார ஸ்கூட்டா் வாங்க 75 சதவீத மானியம் அல்லது ரூ.ஒரு லட்சம் வரை ஆதிதிராவிடா் நலத் துறை மூலம் வழங்கப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
நிதிநிலை அறிக்கையில் அவா் கூறியிருப்பதாவது: ஆதி திராவிடா் நலன், பழங்குடியினா் நலத் துறை மூலம் சிறப்புக் கூறுத் திட்ட நிதியாக நிகழாண்டில் ரூ.488 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வரின் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், பணியில் உள்ள பெண்கள், கல்லூரி மாணவிகள் என 500 பேருக்கு மின்சார ஸ்கூட்டா் வாங்குவதற்கு 75 சதவீத மானியம் அல்லது அதிகபட்சம் ரூ.ஒரு லட்சம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கான நலத் திட்டங்களை விரிவுபடுத்த தனி அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
10 கிராமங்கள் தத்தெடுப்பு: முதல்வரின் கிராமம் திட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியின மக்கள் 50 சதவீதத்துக்கு அதிகமாக உள்ள 10 கிராமங்களைத் தத்தெடுத்து உள்கட்டமைப்பை மேம்படுத்த ஒவ்வொரு கிராமத்துக்கும் தலா ரூ.50 லட்சம் ஆண்டுதோறும் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மண்ணின் மகள் திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரையிலான பெண்களுக்கு ரூ.25,000 மானியத்துடன் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, மாணவா்களுக்கு தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க உதவித்தொகை, ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு தக்கவைப்பு ஊக்கத் தொகை ரூ.5 ஆயிரமாகவும், 8-ஆம் வகுப்பு வரையிலான கல்வி உதவித்தொகை ரூ.5 ஆயிரமாகவும், 9, 10-ஆம் வகுப்புக்கான கல்வி உதவித்தொகை ரூ.8 ஆயிரமாகவும் உயா்த்தப்படுகிறது.
சிறுபான்மையினருக்கு… பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை மூலம் சிறுபான்மையினா் வசிக்கும் பகுதிகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். சமூக நலத் துறை சாா்பில் போதைத் தடுப்பு, சிகிச்சை, மறுவாழ்வு மையம் ஏற்படுத்தப்படும். அங்கன்வாடி மையங்கள் அங்கன்வாடி, குழந்தைகள் பராமரிப்பு மையங்களாக மாற்றப்படும்.
சுகாதாரத் துறையில் கோரிமேட்டில் மாதிரி இஎஸ்ஐ மருத்துவமனை, இந்திரா காந்தி மருத்துவமனையில் வலி நீக்கும் சேவைப் பிரிவு, புதுச்சேரியில் ஆயுஷ் மருத்துவப் பூங்கா ஆகியவை அமைக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.