மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக.16) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநா் கா.சண்முகசுந்தா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மதுரை கோ. புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. பல்வேறு முன்னணி தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று பணியாளா்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.
பத்தாம் வகுப்பு தோ்ச்சி முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரையிலான கல்வி நிலைகளைக் கொண்டவா்கள் இந்த முகாமில் பங்கேற்று, பணி வாய்ப்புகளைப் பெறலாம். முகாமில் தங்கள் கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, கடவுச் சீட்டு அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும் என்றாா்.