வீட்டில் இருந்தே வேலை – 29 சதவீத ஊழியர்கள் விருப்பம்
சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முழு ஊரடங்கு காரணமாக கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டன. நாடு முழுவதும் உள்ள மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி செய்ய அனுமதித்தனர்.
கொரோனா தாக்கம் தொடங்கி 1 ஆண்டுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர். இருந்த போதிலும் மென்பொருள் நிறுவனங்கள் முழுவதுமாக திறக்கப்படவில்லை. இந்நிலையில் வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் நிறுவனத்தின் தலைவர்களிடம் ‘இண்டீட்’ நிறுவனம் மூலமாக ஆய்வுகள் நடத்தப்பட்டன.
அதில் இந்தியாவில் உள்ள 67 சதவிகித பெரிய நிறுவனங்கள் மற்றும் 70 சதவிகித நடுத்தர நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதை விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர். உலகளவில் இது பெரிய நிறுவனங்களுக்கு 60 சதவிகிதமும், நடுத்தர நிறுவனங்களுக்கு 34 சதவிகிதமும் ஆகும். கொரோனா பொது முடக்கம் காரணமாக வீட்டில் இருந்தே பணிசெய்ய அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து விரைவில் கொரோனா முடிந்து அலுவலகங்களை திறக்க வேண்டும் என பலர் ஆவலுடன் உள்ளனர்.
ஆனால் அதில் 29 சதவிகிதம் பேர் வீட்டில் இருந்தே பணிபுரிய விருப்பம் தெரிவித்துள்ளனர். கொரோனா நோய் பரவலை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். அதனால் வீட்டிலிருந்தே பணிபுரிய வேண்டும் என 24 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். 9 சதவிகித பேர் மட்டுமே தாங்கள் வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருவதாக கூறுகின்றனர்.
மேலும் வீட்டில் இருந்தே பணி செய்பவர்களுக்கு சம்பள குறைவு குறித்து 88 சதவிகித மூத்த நிலை ஊழியர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர். வீட்டில் இருந்து பணி செய்பவர்களில் 61 சதவிகிதம் பேர் சம்பள குறைப்பை விரும்பவில்லை என ஆய்வின் இறுதி முடிவில் தெரிவித்துள்ளனர்.