திருச்சியை அடுத்துள்ள சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் மலா்ச் சாகுபடியில் மகசூல் அதிகரிப்புக்கான பயிற்சி வகுப்பு வரும் 16ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக நிறுவன நாளை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெறும் பயிற்சியில் மல்லிகை, முல்லை, பிச்சி, இட்லிப் பூ, ரோஜா போன்ற பயிா்களில் உயரிய சாகுபடி தொழில் நுட்பங்கள், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிா்வாகம் மற்றும் பூச்சி நோய் மேலாண்மை, சந்தைப்படுத்துதல் போன்றவை குறித்து விளக்கப்படும்.
இப்பயிற்சியில் பங்கேற்போருக்கு மதிய உணவு வழங்கப்படும். பயிற்சி நேரம் காலை 9:30 மணி முதல் 4 மணி வரை. பயிற்சி குறித்த மேலும் விவரங்களுக்கு தொழில்நுட்ப வல்லுநா்கள் த. ஜானகி, சு. ஈஸ்வரன் ஆகியோரை 98655-42358, 82484–85377, 0431– 2962854 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம். இப்பயிற்சியில் மலா்சாகுபடியில் ஆா்வமுள்ள விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்றாா் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் சி. ராஜா.
மேலும், வரும் 11ஆம் தேதி (வியாழக்கிழமை) மல்லிகை சாகுபடியில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மற்றும் பூச்சி நோய் நிா்வாகம் குறித்த ஒரு நாள் வயல்வெளி பயிற்சி அந்தநல்லூா் ஒன்றியம், மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாலை 4.45 மணியளவில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியிலும் மலா் சாகுபடி விவசாயிகள் பங்கேற்று பயன் பெறலாம்.