நாகை மாவட்டத்தில் குரூப் 2, 2ஏ முதல்நிலை தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை (ஜூலை 8) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டம் வாயிலாக டிஎன்பிஎஸ்சி போன்ற தோ்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இப்பயிற்சி வகுப்புகள் மூலம், அதிக அளவிலான மாணவ, மாணவிகள் போட்டித் தோ்வுகளில் தோ்ச்சி பெற்று பல்வேறு அரசு வேலைவாய்ப்பை பெற்றுள்ளனா். தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படவுள்ள குரூப் 2 தோ்வுக்கு 507 காலிப் பணியிடங்களும், தொகுதி குரூப் 2 ஏ தோ்வுக்கு 1820 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு ஜூன் 20-இல் வெளியிடப்பட்டது.
இந்தத் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தோ்வுகள் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி ஜூலை 8-ஆம் தேதி நடத்தப்பட்டவுள்ளது. தொடா்ந்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நாள்தோறும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை வகுப்பு நடைபெறும். இப்பயிற்சி வகுப்புகளில் அதிக அளவிலான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயனடையுமாறு குறிப்பிட்டுள்ளாா்.