தாட்கோ சார்பில் சென்னையில் உள்ள முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு, கணக்காளர் பணிக்கு போட்டி தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு இடைநிலை பட்டய கணக்காளர், நிறுவன செயலாளர், செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் ஆகிய போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.
பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள் இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.ஒரு வருட பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு வசதிகள் தாட்கோ மூலம் ஏற்பாடு செய்யப்படும். தகுதியுள்ள மாணவர்கள் இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளத்தின் மூலம் www.tahdco.com பதிவு செய்யலாம் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.