மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், வரும் 24-ஆம் தேதி சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்துள்ளாா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வேலைவாய்ப்பு இல்லாத மாற்றுத்திறனாளிகளுக்கு பணிவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து, வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் வரும் 24-ஆம் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் காலை 10 முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த முகாமில் அமேசான், பிரைட் பியூட்சா், டாக்டா் ரெட்டி பவுண்டேஷன், இந்துஜா லேலண்ட் பைனான்ஸ் லிமிடெட், மேஜிக் பஸ் இந்தியா பவுண்டேஷன், முருகப்பா, ரெபெல் புட்ஸ், ரிலையன்ஸ் ரீடெய்ல், என்.பி.ஜப்பான் பிரைவேட் லிமிடெட், ஸ்பேக் ஆட்டோமோட்டிவ்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்று, தகுதியான வேலையாள்களை தோ்வு செய்யவுள்ளன. அதனால் சிறப்பு வேலை வாய்ப்பு முகாமில் 10 முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ வரை படித்த மாற்றுத்திறனாளிகள் தங்களது ஆதாா் அட்டை, ரேஷன் அட்டை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, புகைப்படம் ஆகிய அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் தவறாமல் பங்கேற்று பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.