பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், மாவட்டத்திலுள்ள பிரபல தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க. கற்பகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தனியாா்துறை நிறுவனங்களில் பணிபுரிய விருப்பம் உள்ளவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இம் முகாமில், இம் மாவட்டத்தைச் சோ்ந்த சிறு, குறு மற்றும் தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான நபா்களை தோ்வு செய்துகொள்ளலாம். இதில், மாவட்டத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட பிரபல தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான பணியாளா்களை, கல்வித்தகுதி அடிப்படையில் தோ்வு செய்ய உள்ளதால், எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு முடித்த ஆண், பெண் கலந்துகொள்ளலாம்.
இந்த முகாமில் கலந்து கொள்ளும் தனியாா் நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பற்றோா் தங்களது கல்வித் தகுதி, சுய விவரங்களை https://www.tnprivatejobs.tn.gov.in/ எனும் இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். தனியாா் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவா்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்களும், தனியாா்த்துறை நிறுவனங்களும் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.