உலகம் முழுவதும் ஐடி நிறுவனங்களில் பல்வேறு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி வரும் நிலையில், இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ( டிசிஎஸ் ) இந்த ஆண்டு 40,000 ஃப்ரெஷர்களை பணிக்கு எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
ஜூன் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தில் புதிதாக 5,452 ஊழியர்கள் பணிக்கு எடுக்கப்பட்டுள்ளனர். அதனால் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 6,06,998 ஆக அதிகரித்துள்ளது.
புதிதாகப் படிப்பு முடித்த மாணவர்களுக்கு இது ஒரு பொற்கால வாய்ப்பாக அமையும். டிசிஎஸ் நிறுவனம் வழக்கமாகப் பல கல்லூரிகளில் நேரடி நியமன நடவடிக்கைகளை (campus recruitment drives) நடத்தி திறமையான மாணவர்களை பணியில் சேர்த்து வருகிறது. இந்த ஆண்டும் அதேபோல் பல்வேறு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து வளாக நேர்காணலை டிசிஎஸ் நிறுவனம் நடத்த முடிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளிலிருந்து திறமையான மாணவர்களை டிசிஎஸ் நிறுவனம் தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது. எனவே, இந்த ஆண்டு படிப்பு முடித்த மாணவர்கள் டிசிஎஸ் நிறுவனத்தின் நேரடி நியமன அறிவிப்புகளில் கவனம் செலுத்தி தங்களது திறமைகளை வெளிப்படுத்தத் தயாராக இருக்க வேண்டும்.
டிசிஎஸ் நிறுவனம் தனது பணியாளர்களுக்குச் சிறந்த பயிற்சி, வளர்ச்சி வாய்ப்புகள் மற்றும் சம்பளம் போன்றவற்றை வழங்குவதற்காக அறியப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு 4.5 சதவிகிதம் முதல் 7 சதவிகிதம் வரை சம்பள உயர்வை அறிவித்துள்ளது.
ஐடி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் அதிக வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படும் எனக் கூறப்பட்டு வரும் நிலையில், டிசிஎஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஃப்ரெஷர்களுக்கு ஜாக்பாட்டாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.