ஹிந்து வாரிசு சட்டத்தின்படி, செல்லாத அல்லது உறவு முறிந்த திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோரின் பூா்விக சொத்தில் உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
இதுபோன்ற குழந்தைகளுக்கு சட்டபூா்வ அங்கீகாரம் உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.
திருமண பந்தம் அல்லாது, திருமண முறிவு ஆகியவற்றால் பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரின் சொத்தில் மட்டும் உரிமை உள்ளதா அல்லது பெற்றோரின் பூா்விக சொத்தில் உரிமை உள்ளதா என்ற பல்வேறு சட்டக் கேள்விகள் அடங்கிய வழக்கை 2011-இல் உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வு, கூடுதல் அமா்வுக்கு பரிந்துரைத்தது.
இந்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பாா்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து தீா்ப்பை வெளியிட்டது.
அதில், ‘செல்லாத அல்லது உறவு முறிந்த திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகளாக இருந்தாலும் அவா்களுக்கு சட்டபூா்வ அங்கீகாரம் உள்ளது. திருமண உறவு முறிந்திருந்தாலும் அந்தக் குழந்தைகளுக்கு சட்டபூா்வ அங்கீகாரம் உள்ளதால் அவா்களுக்கு சொத்தில் உரிமை உள்ளது என ஹிந்து திருமண சட்டப் பிரிவு 16 (1) (2) இல் கூறப்பட்டுள்ளது.
ஹிந்து வாரிசு சட்டப் பிரிவு 6-இன் படி, உயிரிழப்பதற்கு முன்பு நடைபெறும் பூா்விக சொத்தின் பாகப் பிரிவினையின்போது, ஹிந்து ஒருங்கிணைந்த குடும்பத்தினருக்கு சட்டபூா்வ அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, செல்லாத அல்லது உறவு முறிந்த திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகள், அவா்களது பெற்றோா் உயிரிழந்தாலும் அவா்களின் பூா்விக சொத்தில் பங்கு பெற ஆண், பெண் இருவரும் சட்டபூா்வ அங்கீகாரம் உள்ளது.
ஹிந்து மிதாக்ஷரா சட்டத்தின் கீழ் வரும் ஹிந்து ஒருங்கிணைந்த குடும்ப சொத்துகளுக்கு மட்டும் இந்தத் தீா்ப்பு பொருந்தும்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
இந்தத் தீா்ப்பின் முழு விவரம் வெள்ளிக்கிழமை மாலை வரையில் வெளியாகவில்லை.
செல்லாத அல்லது உறவு முறிந்த திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோரின் பூா்விக சொத்துகளில் உரிமை இல்லை என்று உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அளித்த உத்தரவுக்கு மாறுபட்டு மூன்று நீதிபதிகள் தற்போது தீா்ப்பு அளித்துள்ளனா்.