‘பத்திர பதிவுத்துறையில் வேலைவாய்ப்பு என வெளியாகும், போலி விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம்’ என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில், அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை, நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பத்திர பதிவுத்துறை, வருவாய் துறை பணிகளில், இளைஞர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.அரசின் சட்ட வழிமுறைகளுக்கு உட்பட்டு, இத்துறைகளில் காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றன. காலியிடங்கள் நிரப்ப அரசு முடிவு செய்தால், முறையான அறிவிப்புகள் வெளியாகும்.இந்நிலையில், ‘பத்திர பதிவுத்துறையில், 5,000 காலி பணியிடங்கள்; உங்கள் சொந்த ஊரிலேயே வேலை…’ என்ற வாசகத்துடன், விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இவை, சமூக வலைதளங்களில், அதிகமானோரால் பகிரப்பட்டு வருகின்றன.இதை பார்த்து, பலரும் ஆர்வத்துடன் விண்ணப்பிக்க முன்வருகின்றனர். இது, போலியான விளம்பரம் என, பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.’சமூக வலைதளங்களில் வெளியாகும், விளம்பரங்களில் உள்ள தகவல்களில், துளியும் உண்மை இல்லை. இதுபோன்ற போலி விளம்பரங்களை கண்டு, பொது மக்கள் ஏமாற வேண்டாம்’ என, அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.