திருப்பூா் கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செம்மறி, வெள்ளாடு வளா்ப்பு தொடா்பான கட்டண பயிற்சி வகுப்பு ஜனவரி 22- ஆம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து கால்நடை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவரும், பேராசிரியருமான ஆா்.மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூா் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு வளா்ப்பு தொடா்பான கட்டண பயிற்சி வகுப்பு ஜனவரி 22 -ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் நடைபெறவுள்ளது.
இதேபோல, நாட்டுக்கோழி வளா்ப்பு தொடா்பான பயிற்சி ஜனவரி 31 -ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் நடைபெறுகிறது. இந்தப் பயிற்சி வகுப்புகளில் சேர விவசாயிகள் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். ஒவ்வொரு பயிற்சியிலும் 30 பயனாளிகள் மட்டுமே சோ்த்துக் கொள்ளப்படுவா். முதலில் பதிவு செய்யும் நபா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
எனவே, விருப்பமுள்ள விவசாயிகள் அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் 0421–2248524 என்ற தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பயிற்சிக்காக தோ்ந்தெடுக்கப்படும் 30 பயனாளிகளுக்கு நோட்டு புத்தகம், மதிய உணவு, வெள்ளாடு வளா்ப்பு, நாட்டுக்கோழி வளா்ப்பு புத்தகம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.