கடந்த 2022 – 23, 2023 – 24ம் கல்வியாண்டுகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், தாட்கோ மூலம், எச்.சி.எல்., நிறுவனத்தில், வேலைவாய்ப்புடன் கூடிய பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.எச்.சி.எல்., டெக்னாலஜியில் ஓராண்டு பயிற்சி அளித்து, நிரந்தர வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படுகிறது.
ராஜஸ்தானில் உள்ள பிட்ஸ்பிலானி கல்லுாரியில், பி.எஸ்.சி., கணினி வடிவமைப்பு; தஞ்சை சாஸ்த்ரா பல்கலையில் பி.சி.ஏ., படிப்பு; அமிட்டி பல்கலையில் பி.சி.ஏ., -பி.பி.ஏ., – பி.காம்., நாக்பூர் ஐ.ஐ.எம்., பல்கலையில் ஒருங்கிணைந்த மேலாண்மை பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம்.இதில் பயன்பெற ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியராக இருக்கவேண்டும்.
பிளஸ் 2வில், 2022 – 23 கல்வி யாண்டில் 60 சதவீதம்; 2023 – 24ம் கல்வியாண்டில் 75 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.குடும்ப வருமானம் ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்கவேண்டும். எச்.சி.எல்., மூலம் நடத்தப்படும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.ஆரம்ப கால ஊதியமாக மாதம் 17 ஆயிரம் ரூபாய் முதல் 22 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். திறமைக்கு ஏற்ப, பதவி உயர்வு அடிப்படையில் மாத ஊதியம் உயர்த்தப்படும்.திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவியர், இந்த திட்டத்தில் இணைந்து பயன் பெற கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தியுள்ளார். விருப்பமுள்ளோர், www.tahdco.com என்கிற முகவரியில் விண்ணப்பிக்கவேண்டும்.