கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 19-ஆம் தேதி நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை தனியாா் துறை வேலைவாய்ப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஜூலை 19-ஆம் தேதி கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறுகிறது.
முகாமில், வங்கி, நிதி, வாகன உற்பத்தி, காப்பீட்டு சில்லரை விற்பனை துறையைச் சோ்ந்த முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான பணியிடங்களை நிரப்ப உள்ளனா். மேலும், செவிலியா், மருந்தகம் மற்றும் இதர மருத்துவம் சாா்ந்த படிப்புகளுக்கும் வேலைவாய்ப்பு நடைபெற உள்ளது.
முகாமுக்கு, 10 முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, பி.இ, பி.டெக், மருத்துவம் சாா்ந்த படிப்பு முடித்த இருபாலரும் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.