முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் கணிதம், ஆங்கிலம், கணினி அறிவியல் பாடங்களுக்கான தேர்வுக்கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை – 17 / கணினி பயிற்றுநர்கள் நிலை – 1 காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவு சார்ந்து கணினி வழித் தேர்வு இரண்டு அட்டவணைகளில் முறையே 12.02.2022 முதல் 15.02.2022 வரை மற்றும் 16.02.2022 முதல் 20.02.2022 வரை (19.02.2022 நீங்கலாக – உள்ளாட்சித் தேர்தல்) ஆகிய தேதிகளில் இருவேளைகளில் காலை/மதியம்) நடைபெற உள்ளது.
இத்தேர்விற்கு உரிய மாவட்டத்தின் நுழைவுச் சீட்டு (க சோல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in -ல் தேர்வர்கள் தங்களது யூசர் ஐடி மற்றும் கடவுச் சொல் ஆகியவற்றை உள்ளிட்டு, நேற்று முதல் (05.02.2022) பதிவிறக்கம் செய்யும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டள்ளது.
தேர்வர்கள் நுழைவுச் சீட்டினை நகல் எடுத்து தேர்வு மையத்திற்கு நுழைவுச் சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நேரம் மற்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையுடனும் விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியையும் தவறாமல் எடுத்து வர வேண்டும். தேர்வு நாளன்று தேர்வர்கள் முற்பகல் தேர்விற்கு 07.30 மணிக்குள்ளாகவும், பிற்பகல் தேர்விற்கு 1.30 மணிக்குள்ளாகவும் தேர்வு மையத்திற்கு கண்டிப்பாக வருகைபுரிய வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கலாகிறது.
தாமதமாக வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேற்படி கணினி வழித் தேர்விற்கான (Computer Based Examination) பயிற்சித் தேர்வு (Practice Test/Mock Test) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் தங்களின் உள்நுழைவு மற்றும் கடவுச் சொல்லைப் பயன்படுத்தி www.trb.tn.nic.in ல் இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்ளுமாற அறிவுறுத்தப்படுகிறது. இந்த பயிற்சி வினாக்கள் முற்றிலும் பயிற்சிக்காக மட்டுமே எனவும் தெரிவிக்கலாகிறது.
மேலும் நுழைவுச் சீட்டில் மாவட்டம் /நகரம் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்விற்கு மூன்று நாட்களுக்கு முன்பு மீண்டும் ஒருமுறை தேர்வு மையத்தை குறிப்பிட்டு நழைவுச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வர்கள் அதனையும் கண்டப்பாக பதிவிறக்கம் செய்து தேர்வு நுழைவுச் சீட்டில் உள்ள அறிவுரைகளை தவறாமல் பின்பற்றி தேர்வு மையத்தில் தேர்வினை எழுத அறிவுறுத்தப்படுகின்றது. தேர்வு மையம் மாற்றம் குறித்த எவ்வித விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படமாட்டாது. தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீட்டு அட்டவணை கீழே இணைக்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.