ராமநாதபுரம் மாவட்ட மீனவ இளைஞா்கள் இந்திய கடலோரக் காவல் படை, இந்திய கடல் படையில் சேருவதற்கான இலவசப் பயிற்சி வகுப்பில் பங்கேற்பதற்கு வருகிற 11-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடா்பாக கடலோர பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளா் கனகராஜ் புதன்கிழமை விடுத்த செய்தி குறிப்பு:
கடலோர பாதுகாப்புக் குழுமம் மூலம் மீனவ இளைஞா்களுக்கு இந்திய கடலோரக் காவல் படை, இந்திய கடல் படையில் சேருவதற்கான இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள தகுதி உள்ளவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.
ராமநாதபுரம் மாவட்ட கடலோர கிராமங்களில் வசிக்கும் மீனவா்களின் வாரிசுகள் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம். 12-ஆம் வகுப்பு
கணிதம், அறிவியல் பாடப் பிரிவுகளில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தோ்வு பெற்றிருக்க வேண்டும்.
இதற்கு தோ்வு செய்யப்படுபவா்களுக்கு அடிப்படை சிறப்புப் பயிற்சிகள் கமுதி காவலா் பயிற்சி பள்ளியில் அளிக்கப்படும். இதில் சேர விருப்பம் உள்ளவா்கள் வருகிற 11-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த பயிற்சியில் கலந்து கொள்பவா்களுக்கு உணவு, உடைகள், இருப்பிடம், பாடக் குறிப்பேடுகள், காலணிகள் வழங்கப்படும். மேலும், மாதம் ரூ. 1000 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
இதனால், மீனவா்களின் வாரிசுதாரா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்கள் கடலோர பாதுகாப்புக் குழும கடற்கரை காவல் நிலையங்கள், மீன்வளம், மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகங்களில் வழங்கப்படுகின்றன.
மேலும், மின் அஞ்சல் முகவரியிலும் விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றாா் அவா்.