ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்ட இலவச கல்வி மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர்கள் கட்டாயம் அரசால் நியமிக்கப்பட்ட நிறுவனத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
அதன்படி தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் டெட் என்றழைக்கப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற பழங்குடியின பட்டதாரி இளைஞர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் வரும் 10ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன.
பழங்குடியின நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை தெரிவித்திருப்பதாவது: டெட் தேர்வை எழுதுவதற்கு பழங்குடியின பட்டதாரிகளை தயார் செய்யும் விதமாக வரும் 10ம் தேதி முதல் 4 மாதங்களுக்கு சனி மற்றும் வார இறுதி நாட்களில் ஞாயிறுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
அதன்படி இந்த இலவச வகுப்புகள் 9 மாவட்டங்களில் உள்ள உண்டு உறைவிட பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளுடன், நவீன வசதிகள் கொண்ட பயிற்று அரங்கத்துடன் மற்றும் இணைய சேவையுடன் அனுபவமுள்ள ஆசிரியர்களை கொண்டு தனியார் பயிற்சி நிலையங்களை காட்டிலும் பல்வேறு வசதிகளுடன் நடத்தப்பட உள்ளன. ஏறக்குறைய 2061 பட்டதாரிகள் ஆசிரியர்கள் பணிகளுக்கான தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில் இந்த வாய்ப்பை கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் தொடர்ந்து பெறப்பட்டு வருகின்றன.
பயிற்சியின் சிறப்பு அம்சங்கள்
- அனுபவமிக்க ஆசிரியர்களின் வழிகாட்டுதல்
- புதிய பாடத்திட்டத்தின்படி அச்சிடப்பட்ட பாட குறிப்புகள்
- மாதிரி தேர்வுகள்
- திருப்புதல் தேர்வுகள்
- இணையவழி தேர்வு பயிற்சி
- கேள்வி பதில் குறித்த விளக்க உரையாடல்