
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மொபைல் ஆப் டெவலப்பர் பயிற்சியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழக இளைஞர்களுக்கு பல்வேறு துறை சார்ந்த பயிற்சிகள் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அதற்கு ஏற்ற வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்தி தரப்படுகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் முன்னணி தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இப்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆட்டோமொபைல், தொழில்நுட்பம், தகவல் தொடர்பு, உணவு, மருத்துவமனை பணிகள், உற்பத்தி, எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், லாஜிஸ்டிக், நகை டிசைனிங், விற்பனை, மார்க்கெட்டிங், இதழியல் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த ஏராளமான பயிற்சிகள் நான் முதல்வன் திட்டம் மூலம் இலவசமாக அளிக்கப்படுகிறது.
அந்த வகையில், தற்போது நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மொபைல் ஆப் டெவலப்பர் (Mobile App Developer) பயிற்சி இலவசமாக அளிக்கப்பட உள்ளது. மேலும், இப்பயிற்சிக்குப் பின்னர் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும். இந்தப் பயிற்சியில் சேர விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
இந்த மொபைல் ஆப் டெவலப்பர் பயிற்சியில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் போன்களுக்கு ஏற்ற ஆப்-கள் உருவாக்குதல், ஆப் வேகம், பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துதல், ஆப்-கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை கண்டறிந்து சரிசெய்தல் ஆகியவை கற்பிக்கப்படும்.
இப்பயிற்சியில் 18 வயது நிறைந்த 12-ம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது அதற்கு நிகரான கல்வி பெற்றவர்கள் கலந்துகொள்ளலாம். இந்தப் பயிற்சி சென்னை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் வழங்கப்படுகிறது. மேலும் பயிற்சி வகுப்புகள் மார்ச் 24 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இப்பயிற்சி நேரடி வகுப்பாக 210 மணி நேரம் என்ற கணக்கில் நடத்தப்படும். இப்பயிற்சியை முறையாக முடிக்கும் நபர்களுக்கு GRIT Talents, Gradinant, AIRNODE UK, IBM, Brainhunters MY ஆகிய தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும். மேலும், இந்த நிறுவனங்களில் மாத சம்பளமாக ரூ.35,000 முதல் ரூ.45,000 வரை கிடைக்கும்.
தமிழக அரசு இலவசமாக அளிக்கும் இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/3709 என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். சிறந்த வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கும் இளைஞர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.