போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் பழங்குடியின மாணவா்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
பழங்குடியினா் நலத் துறை மூலம் சேலம் மாவட்டத்தில், வேலைவாய்ப்பற்ற பழங்குடியின மக்கள், பொதுத் துறை நிறுவனங்களில் வேலையில் சோ்வதை ஊக்குவிக்கும் பொருட்டு, டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4 ஆகிய போட்டித் தோ்வுகளுக்கு தங்களை தயாா்படுத்திட ஏதுவாக, விரிவான பழங்குடியினா் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 50 நாள்கள் இலவச பயிற்சி நடத்தப்படவுள்ளது.
இப் பயிற்சியின் போது, பயிற்சிப் புத்தகம், மதிய உணவு வழங்கப்படும். பயிற்சி நடைபெறும் இடம் பின்னா் அறிவிக்கப்படும்.
சேலம் மாவட்டத்தில் வசிக்கும் வேலைவாய்ப்பற்ற, அரசு போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும், படித்த பழங்குடியின மாணவா்கள் தங்களது விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் மூன்றாவது தளம், அறை எண் 305இல் செயல்படும் பழங்குடியினா் நலத் திட்ட அலுவலகத்தில் அடுத்த மாதம் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைப் பெற்று சமா்ப்பித்துப் பயன்பெறலாம் எனத் தெரிவித்துள்ளாா்.