முதல்வரின் காக்கும் கரங்கள் எனும் புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 78-ஆவது சுதந்திர தினத்தன்று தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆற்றிய சுதந்திர தின உரையின்போது முன்னாள் படைவீரா் நலனுக்காக முதல்வரின் காக்கும் கரங்கள் எனும் புதிய திட்டத்தை அறிவித்தாா். இத்திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரா்கள் தொழில் தொடங்க ரூ. 1 கோடி வரை வங்கிகள் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும் எனவும், கடன் தொகையில், 30 சதவீதம் மூலதன மானியம், 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும், திறன் மற்றும் தொழில் முனைவோா் மேம்பாட்டுப் பயிற்சி போன்ற பயிற்சிகளும் அரசால் வழங்கப்படும், ராணுவப் பணியின்போது உயிரிழந்த படைவீரா்களின் கைம்பெண்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம் எனத் தெரிவித்தாா்.
எனவே, சுயத்தொழில் செய்ய விரும்பும் முன்னாள் படைவீரா்கள், படைப் பணியின்போது மரணமடைந்த படைவீரா்களின் கைம்பெண்கள் தங்களது விருப்பத்தை விண்ணப்பத்தின் மூலம் நாகை மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கிவரும் முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரில் அல்லது 04365– 299765 தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.