ஆண்டுதோறும் கலை மற்றும் கைவினை தொழிலில் ஈடுபட்டு வருவோருக்கு தொழில் புரிய ரூ.3 லட்சம் வரை பிணையில்லாமல் மானியத்துடன் கூடிய கடனுதவி வங்கிகள் மூலம் 10 ஆயிரம் பேருக்கு கடன் உதவிகள் வழங்கப்பட உள்ளது.
இந்த கடன் தொகையில் 25 சதவீதம், அதாவது அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் மானியமாக வழங்கப்பட உள்ளது. எனவே கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் விளக்கம் அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில் “தமிழ்நாடு அரசு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மூலம் கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், கைவினை கலைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிடும் நோக்கத்திலும் “கலைஞர் கைவினை திட்டம்” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது தமிழக அரசு. இது தொடர்பாக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதில் கலை மற்றும் கைவினை தொழிலில் ஈடுபட்டு வருவோருக்கு மேம்பட்ட பயிற்சி அளிக்கவும், மானியத்துடன் கூடிய பிணையில்லா கடன் வழங்கவும், அவர்களின் சந்தைப்படுத்தும் திறனை உயர்த்தவும் மாநில அளவில் ஆண்டுதோறும் 10 ஆயிரம் பேர் பயன்பெறும் வகையில் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
கலைஞர் கைவினை திட்டம்: இந்த திட்டம் மூலம் ரூ.3 லட்சம் கடன் உதவி வழங்கப்படுகிறது. கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ், கைவினைத்தொழில்களான தையல் கலைஞர், மண்பாண்டம் முனைவோர், சிற்ப கைவினைஞர், தச்சு வேலை செய்வோர், பூ தொடுப்போர், பூ அலங்காரம் செய்வோர், அழகுக்கலை நிபுணர், பாய் பின்னுவோர், கூடை முடைவோர், மூங்கில் பொருட்கள் செய்வோர் உள்ளிட்ட எண்ணற்ற கலை மற்றும் கைவினை தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு தொழில்திறன்சார் மேம்பட்ட பயிற்சி அளிக்கப்படுவதோடு அவர்கள் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் கொண்டு தொழில் புரிய ரூ.3 லட்சம் வரை பிணையில்லாமல் மானியத்துடன் கூடிய கடனுதவி வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் கடன் வாங்குவோருக்கு கடன் தொகையில் 25 சதவீதம் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். கடனை திருப்பி செலுத்தும் காலத்தில் 5 சதவீதம் வரை வட்டி மானியமும் தரப்படும். அனைத்து அரசு மற்றும் தனியார் வணிக வங்கிகள், தாய்கோ வங்கி, கூட்டுறவு வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்க தகுதியான நிறுவனம் ஆகும்.
எப்படி விண்ணப்பிப்பது: இத்திட்டத்தின் கீழ் அனைத்து வகுப்பினரும் விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும், இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் 35 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் எந்த தொழிலுக்காக கடனுதவி பெற நினைக்கிறாரோ அந்த தொழிலில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்த இரண்டு அடிப்படை தகுதிகளும் கொண்டோர் “www.msmeonline.in.gov.in” என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்: தனி நபரின் புகைப்படம், ஆதார் அட்டை, தொழில் அனுபவத்தை உறுதி செய்ய தொழிலாளர் நலவாரியம் வழங்கிய அடையாள அட்டை அல்லது சுய சான்றிதழ் மற்றும் திட்ட அறிக்கை போன்றவை. மேலும் சுய சான்றிதழ் மாதிரிப்படிவம் மற்றும் மாதிரி திட்ட அறிக்கை ஆகியவற்றை மேற்கண்ட இணையதளம் வழியே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதுத் தொடர்பான ஆலோசனைகள், வழிகாட்டுதல் பெறவும் பொதுமேலாளர், மாவட்ட தொழில் மையம், வேலை வாய்ப்பு அலுவலகம் எதிரில், சிட்கோ தொழிற்பேட்டை, செம்மண்டலம் கடலூர்என்ற முகவரியில் உள்ள அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 04142–290116 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். எனவே கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆர்வமும் தகுதியும் உள்ள கைவினைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவிப்பில் கூறியுள்ளார்.