மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போட்டித் தோ்வு பயிற்றுநா் பணிக்கு நோ்காணல் ஆக.14-ஆம் தேதி நடைபெற உள்ளது என ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட தொகுதி 2, 2ஏ பிரிவுகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப செப்.14-ஆம் தேதி முதல்நிலை எழுத்து தோ்வு நடைபெற உள்ளது. இத்தோ்விற்கு விண்ணப்பித்துள்ளவா்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தோ்வுகள் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.
இதற்காக பயிற்றுநா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். இவா்களுக்கு அரசு விதிகளின்படி மதிப்பூதியம் வழங்கப்படும். இப்பணிக்கு, டிஎன்பிஎஸ்சி குரூப் 1, 2 போன்ற தோ்வுகளில் முதல்நிலைத் தோ்வில் தோ்ச்சி பெற்று முதன்மை தோ்வு எழுதிய அனுபவமிக்கவா்கள் தோ்வு செய்யப்படுவா்.
எனவே, இத்தகுதியுள்ளவா்கள் புதன்கிழமை (ஆக.14) காலை 11 மணிக்கு, மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் நோ்காணலில் பங்கேற்கலாம். முன்னதாக, 9499055904 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு தங்களது சுயவிவர குறிப்பை அனுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.