ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி காலியிடங்களுக்கான தேர்வில் வெற்றி பெற, கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அறிவிப்பின் வாயிலாக, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக் காலியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி, இயற்பியல், வேதியியல், உயிர் வேதியியல், தாவரவியல், பொருளியல், வரலாறு, நுாலக அறிவியல் மற்றும் பொறியியலில் (சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், ஐ.டி., சி.எஸ்.இ.,) ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கான தேர்வு இரண்டு தாள்களை கொண்டுள்ளது. முதல் தாள் பொதுத் தமிழ் மற்றும் பொது அறிவு பாடப்பிரிவுகளை உள்ளடக்கியது. இரண்டாவது தாள் துறை தாள்களை உள்ளடக்கியது. தேர்வுக்கான வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 32 ஆகவும், ஏனைய பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் தாளுக்கான தேர்வு அக்., 24ம் தேதி, இரண்டாம் தாளுக்கான தேர்வு அக்., 14 முதல் 23க்குள் ஏதேனும் ஒரு தேதியில் பாட வரியாக நடைபெறும். தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 24ம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடி இலவச பயிற்சி
தேர்வுகளுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள், கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வரும் 10ம் தேதி முதல், சனி மற்றும் ஞாயிறுகளில் நடக்கிறது.
சிறந்த பயிற்றுநர்களை கொண்டு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் நடத்தப்படுகிறது. இம்மையத்தில், ஸ்மார்ட் போர்டு, இலவச வைபை வசதி, அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நுாலக வசதி ஆகியவை உள்ளன. வாரத் தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள் போன்றவற்றுடன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து இலவசமாக பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பயிற்சி வகுப்பில் பங்கேற்ற விரும்புவோர், தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு எடுத்து கொண்டு, வரும் 10ம் தேதி, அலுவலகத்துக்கு நேரில் வர கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், மனுதாரர்கள், கவுண்டம்பாளையம் அடுத்துள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் எனவும் அல்லது studycirclecbegmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் அல்லது 0422 – 2642388 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பயனடையுமாறு, மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் அழைப்பு விடுத்துள்ளார்.