பெரம்பலூா் மாவட்டத்தைச் சோந்த மாற்றுத்திறனாளிகள் இணைப்புச் சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டா் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.கற்பகம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ஒரு கால் பாதிக்கப்பட்டு, 2 கைகள் நல்ல நிலையிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கப்படுகிறது. இதனைப் பெற 18 முதல் 65 வயது வரையுள்ள இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதுவரை, அரசுத் துறைகளில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டா் பெறாதவராக இருக்க வேண்டும். கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
எஞ்சிய ஸ்கூட்டா்கள் பணிபுரிபவா்கள் மற்றும் சுயத்தொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும். தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் இ-சேவை மையத்தில் இணையதளம் வழியாக பதிவுசெய்து, விண்ணப்பத்தின் நகலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் அல்லது அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 04328 – 225474 எனும் எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.