திருப்பூர்;”வீட்டுக்கடன் உள்ளிட்ட தேவைகளுக்கு, நிலம் தொடர்பான ஆன்லைன் சான்றிதழ்களுக்கு, வருவாய்த்துறை சான்றொப்பம் தேவையில்லை” என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.தமிழகத்தில், நிலம் தொடர்பான பதிவேடுகள், புலவரைபட பதிவேடுகள் அனைத்தும், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், ‘தமிழ்நிலம்’ என்ற திட்டத்தின் மூலம், ஆன்லைன் மூலமாகவே, நிலத்தின் விவரங்களை பெற முடியும்.
நகரம் மற்றும் கிராம நத்தம் நீங்கலாக, மற்ற நிலங்களுக்கு இந்த சேவை பொருந்தும். நிலத்தின் பட்டா எண் அல்லது க.ச., எண் விவரம், மாவட்டம், தாலுகா, வருவாய் கிராமம் விவரங்களை உள்ளீடு செய்தால், கம்ப்யூட்டர் சிட்டா, பட்டா நகல்,’அ-பதிவேடு’ ஆகியவற்றின் நகல்களை பெறலாம்.முன்பு காகித வடிவில் இருந்ததால், நகல்களுக்கு வருவாய்த்துறை அதிகாரியின் சான்றொப்பம் தேவைப்பட்டது.
தற்போது, முறையான சரிபார்ப்புக்கு பிறகு,’க்யூ.ஆர்.,’கோடு வசதியுடன், நிலம் தொடர்பான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.வருவாய்த்துறையின் சான்றொப்பம் அவசியம் இல்லை; இருப்பினும், வீட்டுமனை பிரிவு அங்கீகாரம், சொத்துவரி நிர்ணயம், விவசாய கடன், வீட்டுக்கடன், கட்டட அனுமதி, கிரயம் போன்ற பிற தேவைகளின் போது, ஆன்லைன் சான்றிதழ்களுக்கும் வருவாய்த்துறை சான்றொப்பம் கேட்கின்றனர்.இத்தகைய இடர்பாடுகள் குறித்து அரசு கவனத்துக்கு சென்றதால், தமிழக அரசு நிலஅளவைப்பிரிவு கமிஷனர் வாயிலாக, அனைத்து கலெக்டர்களுக்கும் மீண்டும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதன்படி, ‘டிஜிட்டல்’ கையொப்பத்துடன் இணையதளத்தில்இருந்து, ‘க்யூ.ஆர்.,’ கோடு வசதியுடன் பதிவிறக்கம் செய்யும் சான்றிதழ்களுக்கு, வருவாய்த்துறையின் சான்றொப்பம் தேவையில்லை என்று மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கலெக்டர் வினீத்திடம் கேட்டதற்கு, அவர் கூறுகையில், ”நிலம் ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் தொடர்பான உண்மை தன்மையை கண்டறிய, ‘க்யூ.ஆர்.,’கோடு ஸ்கேன் செய்து சரிபார்க்கலாம்.
அதிலேயே, ‘டிஜிட்டல்’ கையொப்பமும் இருக்கிறது.எனவே, இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் நில ஆவணங்களுக்கு. வருவாய்த்துறை சான்றொப்பம் தேவையில்லை; ஸ்கேன் செய்து சரிபார்த்து, தங்கள் சேவையை வழங்கலாம் என, அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


