தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காக பிங்க் ஆட்டோ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், கணவனை இழந்த பெண்கள் மற்றும் சமூகத்தில் தனியாக வாழும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அவர்களுக்கு ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி மற்றும் ரூ.1 லட்சம் வங்கிக் கடன் மானியமாக வழங்கப்படுகிறது.
பெண்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் படி யாரையும் நம்பி இருக்க கூடாது என்பதற்காக மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் கடன் உதவி, மானிய வழங்குதல், தொழில் தொடங்க வங்கியில் கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இது மட்டுமில்லாமல் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களின் அடுத்த கட்டமாக பெண்கள் சுயமாக முன்னேறும் வகையில் பிங்க் ஆட்டோ மகளிர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
கணவனை இழந்த பெண்கள், சமூகத்தில் தனியாக வாழும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்களின் பொருளாதாரம், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக 250 பேருக்கு இளஞ்சிவப்பு ஆட்டோ வழங்கப்படும் என கூறப்பட்டது. இந்த திட்டத்தில் ஆதரவற்ற கைம்பெண்கள் மற்றும் ஆரவற்ற மகளிர் நல வாரியம் மூலமாக பிங்க் ஆட்டோ திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதனையடுத்து சென்னை மாநகரில் பெண்களுக்கான சுயதொழில் உருவாக்கும் விதமாக 250 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.1 லட்சம் வங்கிக் கடன் மானியமாக வழங்கப்பட்டது. தற்போது 250 பெண்களுக்கு ஆட்டோ ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இளஞ்சிவப்பு (Pink) ஆட்டோ திட்டத்தின் கீழ் 250 மகளிருக்கு பயிற்சி வழங்கபட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
அதன் படி பெண்கள் மற்றும் சிறுமியரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பெண்களைக் கொண்டு செயல் படுத்தக் கூடிய இளஞ்சிவப்பு (Pink) ஆட்டோ திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், ஆட்டோக்களை பாதுகாப்பாக இயக்குவது, சுய தற்காப்பு, டிஜிட்டல் முறையில் பணம் பெறுவது, ஜி.பி.எஸ். கருவியின் செயல்பாடு அவசர காலங்களில் காவல்துறையை தொடர்பு கொள்வது குறித்த பயிற்சிகள் தற்போது வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.