குரூப் 2 இலவச பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய அறிவிப்பின் வாயிலாக துணை வணிக வரி அலுவலா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் உள்ளிட்ட பணிகள் அடங்கிய குரூப் 2 தோ்வு 507 காலிப் பணியிடங்களுக்கும், தணிக்கை ஆய்வாளா், உதவியாளா் உள்ளிட்ட பணிகள் அடங்கிய குரூப் 2 ஏ தோ்வு 1,820 காலிப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தோ்வானது செப்டம்பா் 14-ஆம் தேதி காலை நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற்று வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்ற அனைவரும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளலாம்.
இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநா்களைக் கொண்டு ஆங்கிலம், தமிழ் வழியில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மையத்தில் ஸ்மாா்ட் போா்டு, இலவச வைபை வசதி, அனைத்து போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி ஆகியவை உள்ளன.
இப்பயிற்சி வகுப்புகள் வாரத் தோ்வுகள், முழு மாதிரி தோ்வுகள் ஆகியவற்றுடன் நடத்தப்பட்டு வருகின்றன.
https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையத்தில் பதிவு செய்து இலவசமாக பாடக் குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புபவா்கள் தங்களது 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வர வேண்டும்.
மேலும், மனுதாரா்கள் மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டம்பாளையத்தை அடுத்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாகவோ அல்லது studycirclecbe@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ தொடா்புகொண்டு பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.