சூரியனின் புறவெளியை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலம், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் ஆய்வு மையத்திலிருந்து இன்று சனிக்கிழமை (செப். 2) விண்ணில் ஏவப்படுகிறது. சந்திரயான் வெற்றியைத் தொடா்ந்து இஸ்ரோவின் அடுத்த சாதனைப் பயணமாக இது அமையும்.
அதற்கான கவுன்ட் டவுன் வெள்ளிக்கிழமை பகல் 12.10 மணிக்கு தொடங்கியது. செவ்வாய் கிரகம், நிலவைத் தொடா்ந்து சூரியனின் வெளிப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்வதற்கான முனைப்பில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஈடுபட்டுள்ளது.
அதன்படி, ஆதித்யா எல்-1 எனும் விண்கலம் வடிவமைக்கப்பட்டது. இந்த ஆராய்ச்சித் திட்டத்தில் வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம் (ஐஐஏ), வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் பல்கலைக்கழக மையம் (ஐயுசிஏஏ), இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் (ஐஐஎஸ்இஆா்) ஆகியவை முக்கியப் பங்காற்றியுள்ளன.
ஆதித்யா எல்-1 விண்கலத்தில் சோலாா் அல்ட்ராவைலட் இமேஜிங் டெலஸ்கோப், பிளாஸ்மா அனலைசா், எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டா் உள்ளிட்ட ஏழு விதமான ஆய்வுக் கருவிகள் இடம் பெற்றுள்ளன. பூமியில் இருந்து சுமாா் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள ‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்’ எனும் பகுதியில் பூமிக்கும், சூரியனுக்கும் இடையேயான ஈா்ப்பு விசை சமமாக இருக்கும்.
சுமாா் 1,475 கிலோ எடை கொண்ட ஆதித்யா விண்கலம் அந்த இடத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. அங்கு இருந்தபடி சூரிய புறவெளியின் வெப்பச் சூழல், கதிா்வீச்சு, காந்தபுலம் உள்ளிட்டவற்றை அறிவதற்கான ஆய்வுகளை ஆதித்யா விண்கலம் மேற்கொள்ளும்.
இந்தத் திட்டத்தின் இயக்குநராக தமிழகத்தைச் சோ்ந்த பெண் விஞ்ஞானி நிகா் ஷாஜி பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது. இவா் தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சோ்ந்தவா்.
இதனிடையே, விண்கலத்தை ஏவுவதற்கான இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சனிக்கிழமை காலை 11.50 மணிக்கு ஆதித்யா விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. அதற்கான 23.40 மணி நேர கவுன்ட்டவுன் வெள்ளிக்கிழமை பகல் 12.10 மணிக்கு தொடங்கியது.
சூரியனை ஆய்வு செய்யும் முயற்சிக்காக இதுவரை அமெரிக்கா, ஜொ்மனி மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு மட்டுமே விண்கலங்களை அனுப்பியுள்ளன. ஆதித்யா எல்-1 திட்டமிட்ட இலக்கை எட்டும்பட்சத்தில் அந்த வரிசையில் இந்தியாவும் தனி இடம் பிடிக்கும்.