தமிழகத்தில் கோயில்களின் வடக்கு கோபுர வாசல்களை மூடி வைத்திருப்பது ஏன் என கேள்வி எழுப்பிய சென்னை உயா்நீதிமன்றம், அனைத்து கோயில்களிலும் வடக்கு கோபுர வாசல்களை உடனடியாகத் திறக்க உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம், திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயிலில் உள்ள மொட்டை கோபுரத்தை ஆகம விதிகளின்படி கட்ட நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு, நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில், ‘ஆகம விதிப்படி, கோயிலின் கிழக்கு பக்கம்தான் ராஜ கோபுரம் இடம்பெற வேண்டும். ஆனால், இந்த கோயிலில் வடக்கு பக்கம் நோக்கி கோபுரம் கட்டப்பட்டுள்ளது’ என்று வாதிடப்பட்டது.
அப்போது, அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் மீதான படையெடுப்புகள் காரணமாக கட்டுமானங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பஞ்சரத்ன ஆகமப்படி, எந்த திசையிலும் ராஜகோபுரம் கட்டிக் கொள்ளலாம் என நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்’ என்று கூறப்பட்டது. இதற்கு மனுதாரா் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது. தமிழகம் முழுவதும் அனைத்துக் கோயில்களிலும் வடக்கு கோபுர வாசல் மூடப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முன்னோருக்கு தெரியாத ஆகமமா இப்போது உள்ளவா்களுக்கு தெரியப் போகிறது என கேள்வி எழுப்பினா். பின்னா், அனைத்துக் கோயில்களிலும் மூடப்பட்டுள்ள வடக்கு கோபுர வாசல்களை உடனடியாக திறக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.
மேலும், 1726-ஆம் ஆண்டு பிறந்த அகோர சிவாச்சாரியாா் எழுதிய ஆகமத்தின்படி சில கோயில்களில் வடக்கு கோபுர வாசல்கள் அமைக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனா்.