சேலம் மாவட்டத்தில் கல்விக்கடன் வேண்டி வங்கிகளிலும் இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பித்த அனைத்து மாணவா்களும் அக்.15 இல் நடைபெறும் கல்விக்கடன் மேளாவில் கலந்து கொள்ளலாம் என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.
சேலம் மாவட்டத்தில் மாபெரும் கல்விக்கடன் மேளா நடத்துவது தொடா்பான முன்னேற்பாடுகள் குறித்து வங்கியாளா்கள் மற்றும் அரசு அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் செ.காா்மேகம் பேசியதாவது:
சேலம் மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் வரும் அக்.15 ஆம் தேதி சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் மாபெரும் கல்விக்கடன் மேளா நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் 10-ஆம் வகுப்பு படித்தவா்களுக்கு டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ படிப்பதற்கும், 12-ஆம் வகுப்பு படித்தவா்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை படித்துக் கொண்டிருப்பவா்களுக்கும், முதுநிலைக் கல்வி படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவியா்களும் கல்விக் கடன் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், மேற்குறிப்பிடப்பட்ட கல்விக்கடன்களைப் பெற விரும்பும் மாணவ, மாணவியா்கள் 10-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், பான் அட்டை நகல், ஜாதிச்சான்று நகல் ஆகிய ஆவணங்களைக் கொண்டு விண்ணப்பிக்கலாம்.
மாணவா்கள் கல்விக் கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் வகையில் பிரத்தியேகமாக ‘வித்யா லட்சுமி’ என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. மாபெரும் கல்விக்கடன் மேளாவிற்கென அனைத்து கல்லூரிகளிலும் ஒரு ஒருங்கிணைப்பாளா் மற்றும் இரண்டு மாணவா்கள் நியமிக்கப்பட்டு, கல்விக்கடன் வழங்குவதற்கு ‘வித்யா லட்சுமி’ இணைய தளத்தில் விண்ணப்பிக்கும் முறை குறித்த பயிற்சி வரும் அக்.9 ஆம் தேதி சோனா கல்லூரியில் நடைபெறவுள்ளது.
மேலும், இப்பயிற்சி பெற்ற ஒருங்கிணைப்பாளா் மற்றும் மாணவா்கள் தங்கள் கல்லூரிகளுக்கு சென்று இணையதளத்தில் கல்விக் கடன் கோரி விண்ணப்பிக்கும் முறை தொடா்பாக பிற மாணவா்களுக்கு எடுத்துரைப்பாா்கள். சேலம் மாவட்டத்தில் ஏற்கெனவே கல்விக்கடன் தொடா்பாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மற்றும் தற்போது இணைதளத்தில் புதிதாக விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் தொடா்பாக விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அக்.15 ஆம் தேதி சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெறவுள்ள மாபெரும் கல்விக்கடன் மேளாவில் சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து வங்கிக் கிளை மேலாளா்களும் கலந்து கொள்ள உள்ளனா்.
எனவே, சேலம் மாவட்டத்தில் கல்விக்கடன் வேண்டி வங்கிகளிலும் இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பித்த அனைத்து மாணவா்களும் கலந்து கொண்டு, இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அலா்மேல்மங்கை, உதவி ஆட்சியா் (பயிற்சி) சுவாதிஸ்ரீ, தனி மாவட்ட வருவாய் அலுவலா் கீதாபிரியா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் சிவகுமாா், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் இளவரசு மற்றும் அனைத்து வங்கி மேலாளா்கள் உள்ளிட்ட தொடா்புடைய அலுவா்கள் கலந்து கொண்டனா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


