சிவகங்கை மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு வருகிற 16-ஆம் தேதி காந்தி ஜெயந்தி பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வருகிற 16-ஆம் தேதி பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. சிவகங்கையில் உள்ள மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி வளாக அரங்கில் போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித் தனியே முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.3000, மூன்றாம் பரிசாக ரூ.2000, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும், பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப்போட்டிகளில் சிறப்புத் திறமையை வெளிப்படுத்தும் அரசுப் பள்ளி மாணவா்கள் இருவா் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு சிறப்பு பரிசுத் தொகையாக தலா ரூ.2000, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
பள்ளி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிக்கு காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு, தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள், வட்ட மேஜை மாநாட்டில் காந்தியடிகள் ஆகிய மூன்று தலைப்புகளும், கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிக்கு காந்தியடிகள் நடத்திய தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம், சத்திய சோதனை, மதுரையில் காந்தி ஆகிய 4 தலைப்புகளும் தமிழ் வளா்ச்சித் துறையால் வழங்கப்பட்டுள்ளன.
போட்டிகளுக்கான தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை போட்டி நடைபெறும் நேரத்தில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் குலுக்கல் சீட்டு முறையில் தெரிவு செய்து அந்தத் தலைப்பில் மட்டுமே பேசுவதற்கு அனுமதிக்கப்படுவா்.
போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவா்கள் உரிய படிவத்தை நிறைவு செய்து, பள்ளித் தலைமையாசிரியா் அல்லது கல்லூரி முதல்வா் பரிந்துரை ஒப்பம் பெற்று, சிவகங்கை மாவட்டத் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநரிடம் போட்டி நடைபெறும் நாளன்று நேரில் அளித்துப் பங்கேற்கலாம்.
மேலும், இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநரை நேரிலோ அல்லது 04575-241487 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ அலுவலக நாள்களில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


