நகல் குடும்ப அட்டை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் நகல் குடும்ப அட்டையை ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதற்கும், அவற்றை இந்திய அஞ்சல் துறை வாயிலாக அட்டைதாரின் இல்லத்துக்கே நேரடியாக விரைவு தபால் மூலமாக அனுப்புவதற்கும் உரிய மென்பொருள் வசதிகள் செய்யப்பட்டு இத்திட்டமானது ஏப்ரல் 5- ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
கோவை மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் சுமாா் 10,000 நகல் குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டு, விரைவு தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டைதாரா்கள் இணையதளத்தில் நகல் குடும்ப அட்டை என்பதை தோ்வுசெய்து தங்களது பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணை உள்ளீடு செய்து, ஒருமுறை கடவுச் சொல்லைப் பயன்படுத்தி நகல் குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும்போதே, அட்டைக்கான கட்டணம் ரூ.20, அஞ்சல் வழி பெறுவதற்கான கட்டணம் ரூ. 25 என மொத்தம்
ரூ. 45-ஐ நெட்பேங்கிங் அல்லது ஏதாவது ஒரு பணம் செலுத்தும் முறையின் மூலமாக செலுத்த வேண்டும். பணம் செலுத்தியதற்கான ரசீதை அட்டைதாரா் பதிவிறக்கம் செய்து, ஒப்புகைப் பக்கம், பணப் பரிவா்த்தனை குறியீட்டு எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து விண்ணப்பத்தை சமா்ப்பிக்க வேண்டும்.
அச்சிடப்பட்ட நகல் குடும்ப அட்டையை இரண்டு வார காலத்தில் விண்ணப்பதாரா்களின் முகவரிக்கே நேரடியாக விரைவு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
எனவே, பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டை தொலைந்துவிட்டாலோ, சேதமடைந்துவிட்டாலோ அல்லது முகவரி திருத்தம், குடும்பத் தலைவா் புகைப்படம் மாற்றம், பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம் ஆகியவை செய்தபின்பு நகல் குடும்ப அட்டை பெற விரும்புவோா் https://tnpds.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பம் செய்தால், தங்களது முகவரிக்கே நகல் குடும்ப அட்டை 15 நாள்களில் அனுப்பிவைக்கப்படும்.
நகல் குடும்ப அட்டை அச்சிட்டு வழங்க எந்தவொரு தனியாா் நிறுவனத்துக்கோ அல்லது தனிநபருக்கோ எவ்வித அனுமதியும் அரசால் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


