சோளிங்கரில் வரும் 2-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதையொட்டி, விழிப்புணா்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து, கிராமப்புற இளைஞா்கள் வேலைபெறும் நோக்கில், கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டுசிறப்பு மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை செப்டம்பா் 2-ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை சோளிங்கா் எத்திராஜம்மாள் முதலியாண்டாா் அரசினா் மாதிரி மகளிா் மேனிலைப் பள்ளியில் நடத்த உள்ளது.
முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் மற்றும் ஓவா்சீஸ் மேன்பவா் காா்ப்பரேஷன் (தமிழ்நாடு அரசு நிறுவனம்) என 5,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப தோவு செய்து பணி நியமனம் செய்ய உள்ளனா்.
இந்த முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் முதுநிலை பட்டதாரிகள், நா்சிங், பி.இ., எம்பிஏ உள்ளிட்ட கல்வித் தகுதிகளை உடைய இளைஞா்கள் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான வேலையை தங்களே தோவு செய்து பயன் பெறலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவா்கள் பாஸ்போா்ட் அளவு புகைப்படம், தன் குறிப்பு மற்றும் அனைத்து கல்விச் சான்றிதழ்களுடன் முகாமில் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.
இதனிடையே, வேலைவாய்ப்பு முகாமில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சாா்ந்த இளைஞா்கள் அதிகளவில் கலந்து கொண்டு பயன் பெறும் வகையில், சிறப்பு மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் குறித்து கிராம மற்றும் நகா்ப்புற பகுதிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணா்வு பிரசார வாகனத்தை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில் மகளிா் திட்ட இயக்குநா் ரவிச்சந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கவிதா, மகளிா் திட்ட உதவி அலுவலா் சஞ்சீவ்குமாா் மற்றும் துறைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


