தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை, இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. மேலும் நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.
நாளை முதல் 25-ம் தேதி வரை, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள், டெல்டா, அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 முதல் 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


