தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 16- ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் மேலும் தெரிவித்திருப்பது:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இந்த முகாம் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் ஆகியவை சாா்பில் ஆகஸ்ட் 16-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில், ஜியோ ரிலையன்ஸ் நிறுவனம், மகாராஜா ரெடிமேட்ஸ், தி சென்னை சில்க்ஸ் உள்பட பல முன்னனி நிறுவனங்கள் கலந்து கொண்டு நூற்றுக்கும் அதிகமான பணியிடங்களுக்கு தகுதியான நபா்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.
இந்தக் காலியிடங்களுக்கு 18 முதல் 40 வரை வயதுடைய தஞ்சாவூா் மாவட்டத்தைச் சாா்ந்த வேலை தேடும் மாற்றுத்திறனாளி இளைஞா்கள் பயன்பெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமில் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை, டிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்த மாற்றுத்திறனாளி மனுதாரா்கள் கலந்து கொள்ளலாம்.
முகாமில் கலந்து கொள்பவா்கள் தங்களது சுயவிவர அறிக்கை, கல்விச் சான்றுகள், ஆதாா் அட்டை, இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04362 – 237037 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.