தமிழ்நாட்டில் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் விதமாக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது.
தற்போது இந்நிறுவனத்தின் சார்பில் 3 நாட்கள் பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி சென்னையில் நடைபெற இருக்கிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.
தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் உள்ள ஈக்காட்டுத்தாங்கலில் அமைந்துள்ளது. தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சென்னையில் 07-08-2024 முதல் 09-08-2024 வரையிலான 3 நாட்களில் பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நடைபெற இருக்கிறது. இப்பயிற்சி காலை 9:30 மணி முதல் மாலை 06:00 மணி வரை நடைபெறும். இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.
பயிற்சியில் பேக்கரி பொருட்களின் மூலப்பொருள் மற்றும் பிராண்ட் ஆகியவற்றின் கிடைக்கும் தன்மை, இயந்திரங்கள், கருவிகள் மற்றும் உபகரணங்களின் உள்ளீடுகள் குறித்து எடுத்துரைக்கப்படும். இதுதவிர்த்து ஜெர்ரா உப்பு பிஸ்கட், ஹைதராபாத் கராச்சி பிஸ்கட், ஈஸ்ட் புளிக்க வைக்கப்பட்ட பாம்பே பன், இனிப்பு குக்கீகள், கிரீம் பன், பழ ரஸ்க், இனிப்பு ரொட்டி, கேக் வகைகள் மற்றும் பப்ஸ் வகைகள் ஆகியவற்றை எப்படித் தயாரிக்க வேண்டும் என்பது குறித்தும் பயிற்சி வழங்கப்படும். மேலும் தயாரிப்புக்குப் பின் சந்தைப்படுத்தலின் அம்சங்கள், பேக்கிங், லேபிளிங் மற்றும் விலை வழிமுறைகள் ஆகியவை கற்றுத் தரப்படும். இத்தொழிலுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் உதவிகள் மற்றும் மானியங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்படும்.
தகுதிகள்:
18 வயது நிரம்பிய ஆர்வமுள்ள ஆண், பெண் தொழில் முனைவோர்கள் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.
குறைந்தபட்சமாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பேக்கரி பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகள் 3 நாட்கள் தங்குவதற்கு ஏற்ப, குறைந்த விலையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதிகள் உள்ளன. இதற்கும் முன்னரே விண்ணபித்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
பேக்கரி பயிற்சி குறித்த கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள www.editn.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
மேலும் விவரங்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரையிலான அலுவலக நாட்களில், காலை 10:00 மணி முதல் மாலை 5:45 மணி வரை அலுவலத்தைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை – 600 032.
தொடர்பு எண்: 86681 02600 / 70101 43022.
குறிப்பு: பேக்கரி பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு அவசியம். மேலும், பயற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.