நாம் எவ்வளவு சம்பாதித்தாலும் செலவாகத் தான் செய்யும். ஆரம்பத்திலேயே சேமிப்பு என்ற பழக்கம் இல்லையென்றால் எதிர்காலத்தில் நம்முடைய நிலைமைக் கேள்விக்குறி தான்.
குறிப்பாக கொரோனா நமக்கு நல்ல பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது. வேலையிழப்பு, வருமானம் இல்லா சூழல் என பல இக்கட்டான சூழல்களைச் சந்தித்தப் பிறகு தான் நம்மில் அனைவருக்கும் ஏதாவது ஒன்றில் பணத்தை சேமிக்கும் பழக்கம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
இருந்தப் போதும் சம்பளத்தில் சிறிய தொகையை எதிர்காலத் தேவைக்காக முதலீடு செய்ய வேண்டும் என்று நாம் நினைக்கும் அதே வேளையில் ஓரளவிற்கு வட்டியுடன் ரிஸ்க் இல்லாத முதலீட்டு திட்டங்களைத் தான் தேர்வு செய்ய நினைக்கிறோம். பலர் ஈக்விட்டிகளில் முதலீடு செய்ய விரும்பினாலும். அது ரிஸ்க் உடன் வருகிறது. இந்நிலையில் தான் முதலீடு செய்பவர்களுக்கு எவ்வித அபாயமும் இல்லாமல் இருக்கும் முதலீடு மற்றும் சேமிப்புத்திட்டங்களில் ஒன்றாக உள்ளது பொது வருங்கால வைப்பு நிதி என்கிற பிபிஎஃப் (Public provident fund investment – PPF).
பொது வருங்கால வைப்பு நிதி முதலீடு:
தபால் நிலையம் அல்லது வங்கிகளில் பொது வருங்கால வைப்பு நிதி முதலீட்டு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்த சேமிப்புத் திட்டத்தில் இணையும் நபர் 15 ஆண்டுகளுக்கு ரூ. 100 முதல் ரூ. 1.5 லட்சம் வரை மட்டுமே முதலீடு செய்ய முடியும். அதற்கு மேல் முதலீடு செய்ய அனுமதிப்பதில்லை. பெரிய தொகையை முதலீடு செய்ய முடியாதவர்களுக்கும் பிபிஎஃப் நல்ல ஆபத்து இல்லாத விருப்பமாக உள்ளது. தபால் அலுவலகத்தைப் பொறுத்தவரை பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் என்ற பெயரில் பிபிஎஃப் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
பிபிஎஃப் சேமிப்புத்தொகை மற்றும் வட்டி விகிதம்:
ரிஸ்க் இல்லாத முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், 15 ஆண்டுகளுக்கு ஒரு நாளைக்கு ரூ. 100 என்ற விகிதத்தில் மாதம் ரூபாய் 3000 வரை முதலீடு செய்யலாம். பிபிஎஃப்-க்கு வழங்கப்படும் 7.1 சதவீத வட்டி விகிதத்தில் ரூபாய் 9,76,370 பெற முடியும். அதே சமயம் தினமும் ரூ. 100 என்ற தொகையிலிருந்து கொஞ்சம் உங்களது சேமிப்புத் தொகையை அதிகரித்து 15 ஆண்டுகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூபாய் 3080 முதலீடு செய்தால் 7.1 சதவீத வட்டியுடன் ரூ. 10,02, 407 வரை நீங்கள் பெற முடியும்.
எனவே ஏதேனும் ஒன்றில் குறைவானத் தொகையுடன் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் எவ்வித அச்சமும் இன்றி பிபிஎஃப் முதலீடு செய்து பயன்பெறலாம்.