தமிழக அரசின் இலவச தையல் இயந்திரம் பெறும் திட்டத்தில் பயனாளிகள் இ-சேவை மையம் வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் ஆதரவற்ற பெண்கள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் சத்தியவாணி முத்து அம்மையாா் நினைவு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் நேரடியாகப் பெறப்பட்டு வந்த நிலையில் தற்போது சென்னை சமூக நல இயக்குநா் அறிவிப்பின்படி இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் மட்டுமே அளிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான லிங்க் https://www.tnesevai.tn.gov.in/ அரசு இ-சேவை மையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே இனி வருங்காலங்களில் சத்தியவாணி அம்மையாா் நினைவு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற 20 முதல் 40 வயதிற்குள்பட்ட பெண்கள் அருகில் உள்ள இ-சேவை மையங்களை தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.