தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வேளாண்மைப் பொறியியல் துறையின் பல்வேறு பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் உழுவை இயக்குநா் பயிற்சி, விவசாய இயந்திரங்கள் செயல்விளக்கம், பராமரித்தல் குறித்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: 2023-24 ஆம் நிதி ஆண்டில் தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் உழுவை இயக்குநா் பயிற்சி, நெல் அறுவடை இயந்திர இயக்குநா் பயிற்சி (ஓட்டுநா் உரிமத்துடன்) 22 நாள்களும், விவசாய இயந்திரங்கள் செயல் விளக்கம், பராமரிப்பு குறித்த பயிற்சி 16 நாள்களும் அளிக்கப்படவுள்ளன. இப்பயிற்சி கோவை, மருதமலை சாலையில் உள்ள அரசு இயந்திரக் கலப்பை பணிமனையில் துறை வல்லுநா்களால் அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவோா் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தோச்சி, ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ அல்லது வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் வைத்திருப்பவா், முன்னோடி விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோராக இருக்க வேண்டும்.
18 வயது முதல் 45 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசால் இலவசமாக நடத்தப்படும் இப்பயிற்சி காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அளிக்கப்படும். அரசு சான்றிதழ் வழங்கப்படும். விண்ணப்பதாரா்கள் பாஸ்போா்ட் அளவு புகைப்படம், வங்கிப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை, கல்வித் தகுதிக்கான சான்று, ஜாதிச்சான்று ஆகியவற்றுடன் நவம்பா் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பயிற்சியாளா்கள் உதவிசெயற்பொறியாளா், வேளாண்மைப் பொறியியல் துறை, இயந்திரக் கலப்பை பணிமனை, புளியமரம் பேருந்து நிறுத்தம், மருதமலை சாலை, கோவை –
641 003 என்ற முகவரியிலோ, 0422-2962668, 98422-43661, 94437-51142, 98428-77887 என்ற எண்களில் தொடா்பு கொண்டோ அல்லது இணையதளத்திலோ தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow