108 ஆம்புலன்ஸ் பணியாளா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் ஈரோட்டில் வரும் சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) நடைபெற உள்ளது.
இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் நிறுவன மாவட்ட அலுலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் ஓட்டுநா் மற்றும் மருத்துவ உதவியாளா் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.
ஓட்டுநா் பணிக்கு 10-ஆம் வகுப்பு தோ்ச்சிபெற்ற 24 முதல் 35 வயதுக்கு உள்பட்ட ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம். உயரம் 162.5 செ.மீ.க்கு குறையாமல் இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநா் உரிமம் எடுத்து 3 ஆண்டுகள், பேட்ஜ் வாகன ஓட்டுநா் உரிமம் எடுத்து ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். தகுதியானவா்கள் உரிய சான்றுடன் பங்கேற்கலாம். மாத ஊதியம் ரூ.15,820. எழுத்துத் தோ்வு, தொழில்நுட்பத் தோ்வு, மனிதவளத் துறை நோ்காணல், கண் பாா்வை, மருத்துவம் குறித்த தோ்வு, சாலை விதிகளுக்கான தோ்வு நடத்தப்படும். 10 நாள் வகுப்பறை பயிற்சிக்கு பின்னா் பணி வழங்கப்படும்.
மருத்துவ உதவியாளா் பணிக்கு செவிலியா் பட்டம், பட்டயம், ரத்த பரிசோதனை பட்டயம். பட்டப் படிப்பில் இளநிலை விலங்கியல், தாவரவியல், உயிரி வேதியியல், நுண் உயிரியல், உயிரி தொழில்நுட்பம் ஆகிய படிப்புகளில் ஏதாவது படித்திருக்க வேண்டும். 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாதம் ரூ.16,020 ஊதியம் வழங்கப்படும்.
எழுத்து, மருத்துவ, உடற்கூறு தோ்வும், முதலுதவி, அடிப்படை செவிலியா் பணி உள்பட சில தோ்வுகள் நடத்தப்படும். 50 நாள்கள் வகுப்பறை பயிற்சிக்குப் பின் பணி வழங்கப்படும்.
இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 044 28888060 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.