திருச்சிராப்பள்ளி மாநகராட்சி நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2ஏ மெயின் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது என ஆணையர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம், மண்டலம் 2 பாலக்கரை (வேர்ஹவுஸ் மேம்பாலம் அருகில்) மற்றும் மண்டலம் 4 கன்டோன்மென்ட் குதுப்பாப்பள்ளம் ஆகிய இரண்டு மையங்களில் உள்ளது.
தமிழ்நாடு அரசு தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2A மெயின் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இணையதளம் வாயிலாக நடத்தப்பட உள்ளன. தமிழ்நாடு அரசின் அண்ணா நிர்வாகவியல் பணியாளர்கள் கல்லூரி, சென்னை மூலம் ‘மிஷன் 80’ என்ற பாடத்தின் படி பயிற்சி வகுப்புகள் நவம்பர் மாதம் முதல் 29.01.2025 வரை AIM TN என்ற யூடியூப் மூலம் 80 நாட்கள் நடைபெற உள்ளன.
பயிற்சி வகுப்புகள் நாள் ஒன்றுக்கு மூன்று வகுப்புகள் என காலை 8.00மணி, மதியம் 1 மணி மற்றும் மாலை 6.00 ஆகிய நேரங்களில் நடைபெறும். வார இறுதியில் அந்தந்த வாரம் நடைபெற்ற பயிற்சி பாடத்திட்டம் குறித்த மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.
இப்பயிற்சி வகுப்புகள் நடந்து முடிந்த பின் Nokkam App வாயிலாக மொத்த பாடத்திட்டம் குறித்து ஆன்லைன் மூலம் 5 மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
இந்நூலகம் மற்றும் அறிவு சார் மையங்களில் இப்பயிற்சி வகுப்புகளை இணையத்தளம் வாயிலாக காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, மாணவர், மாணவிகள் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2A மெயின் தேர்வுகளுக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பயன் பெறுவீர். மேலும், மண்டலம் 2 பாலக்கரை (வேர்ஹவுஸ் மேம்பாலம் அருகில்) மற்றும் மண்டலம் 4 கன்டோன்மென்ட் குதுப்பாப்பள்ளம் நூலகரை நேரில் சந்தித்து விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.