தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை அதிகற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 6000 ஆசிரியர் பணியிடங்கள் தற்போது நிரப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஆரம்பப் பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை சுமார் 38 ஆயிரம் அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மேல்நிலைப் பள்ளிகளில் 1000 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசு உயர்நிலைப் பள்ளிகளில் 1000 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. நடுநிலைப்பள்ளிகளிலும் பல ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.
அரசு தொடக்கப் பள்ளிகளில் 2000 ஆசிரியர் பணியிடங்கள் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் உள்ளன. இந்த கணக்கெடுப்பை தமிழக பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால் குறிப்பிட்ட பாடங்களை மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளது. சில இடங்களில் பள்ளி மாணவர்களே தங்கள் பள்ளிக்கு ஆசிரியர்களை நியமியுங்கள் என்று போராடும் நிலையும் ஏற்பட்டது.
ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதால் தற்போது பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கிறது. இதனால் மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதில் சிக்கல் உருவாகிறது. இதனால் தற்போது 6000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் நடைபெறுவதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தமிழக அரசு மாணவர்களின் கல்வி மேம்பாடு அடைய பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. காலை உணவு, நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி, புதுமைப் பெண் என பல திட்டங்கள் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காக உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதிரிப் பள்ளிகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதனால் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் நாட்டில் உள்ள முதன்மை உயர் கல்வி நிறுவனங்களுக்கு கல்வி கற்கச் செல்வது அதிகரித்துள்ளது.
அதேசமயம் பல இடங்களில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறையாலும், உட்கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லாததாலும் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலையைப் போக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மாணவர்களின் கல்வி மேம்பாடு அடைய அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ, மாணவியருக்கு தரமான கல்வியை வழங்க பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்துப் பாடங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஆசிரியர் நியமனம் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று தகுதியடைந்தவர்களுக்கு மீண்டும் பணிநியமனத்துக்கான தேர்வை நடத்தாமல், தகுதித் தேர்வின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதன் பேரில், விரைவில் சுமார் 6000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது. இந்த நியமனங்களில் தகுதித் தேர்வின் அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.