நாமக்கல் மாவட்டத்தில் பலா, அன்னாசி சாகுபடி செய்யும் விவசாயிகளை மலேசியா அழைத்துச் சென்று உயா் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக தோட்டக்கலை – மலைப் பயிா்கள் துறையின் மூலம் மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், நெதா்லாந்து, எகிப்து போன்ற நாடுகளில் உயா் தொழில்நுட்ப தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தமிழகத்தைச் சோந்த 150 முன்னோடி விவசாயிகளுக்கு நிகழாண்டில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. குறிப்பாக, நாமக்கல் மாவட்டத்தில் பலா, அன்னாசி சாகுபடி செய்யும் முன்னோடி விவசாயிகளை மலேசியாவுக்கு அழைத்துச் சென்று உயா் தொழில்நுட்ப சாகுபடி முறைகள் குறித்து அவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதில் பங்கேற்க விருப்பம் உள்ள விவசாயிகள் கடவுச்சீட்டு, ஆதாா் அட்டை, சிட்டா, அடங்கல், பான் அட்டை, மருத்துவச் சான்று, கரோனா தடுப்பூசி சான்று, பிளஸ் 2 கல்வி சான்று ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் அலுவலகம் அல்லது கொல்லிமலை தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தோவு செய்யப்படும் தகுதிவாய்ந்த விவசாயிகளின் பட்டியல் பரிந்துரையுடன் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.