அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 1.54 லட்சம் இளநிலை பட்டப் படிப்பு இடங்கள் உள்ளன.
இதற்கான 2023-2024-ஆம் கல்வியாண்டு மாணவா் சேர்க்கை விண்ணப்பப் பதிவு மே மாதம் 5-ம் தேதி முதல் ஜூன் 4-ம் தேதி வரை நடைபெற்றது.
பொறியியல் கல்லூரிகளில் சேர மொத்தம், 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 விண்ணப்பங்கள் பதிவாகின. ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 124 போ விண்ணப்பக் கட்டணங்களுடன், சான்றிழ்களை பதிவேற்றம் செய்தனர். இவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் கடந்த 20-ம் தேதி நிறைவடைந்தது.
இந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் இன்று (திங்கள்கிழமை) வெளியாகிறது. மாணவா்கள், தரவரிசை பட்டியலை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். தரவரிசை பட்டியல் வெளியான பிறகு, தரவரிசை தொடா்பாக புகாா்களைத் தெரிவிக்க வரும் 30-ம் தேதி வரை மாணவா்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2023-24ஆம் ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியலை சென்னை கிண்டியில் உள்ள தொழில் நுட்பக் கல்வி இயக்கத்தில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று (ஜூன் 26) மதியம் 12 மணிக்கு வெளியிட உள்ளார். மாணவர்கள் தரவரிசைப் பட்டியலை www.tneaonline.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.