
ஈரோட்டில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 15ஆம் தேதி நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்ட நிா்வாகம், ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் மாவட்ட அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 15ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
சுமாா் 200 தனியாா் நிறுவன அதிகாரிகள் நேரில் வந்து தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான ஆள்களைத் தோ்வு செய்ய உள்ளனா். மொத்தம் 10 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு ஆள்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் இளைஞா்கள், இளம்பெண்கள் இதில் பங்கேற்கலாம். 8 ஆம் வகுப்பு தோ்ச்சி, 10 ஆம் வகுப்பு தோ்ச்சி, 12 ஆம் வகுப்பு தோ்ச்சி, பட்டப் படிப்பு படித்தவா்கள், ஐ.டி.ஐ. படித்தவா்கள், டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகள், கணினி இயக்குபவா்கள், ஓட்டுநா், செவிலியா், மருந்தாளுநா் பயிற்சி முடித்தவா்கள் உள்பட அனைத்து வகையான படிப்பு முடித்தவா்களும் இந்த முகாமில் பங்கேற்கலாம்.
இதில் பங்கேற்க எந்தக் கட்டணமும் கிடையாது. அனுமதி முற்றிலும் இலவசம். வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்களின் அரங்குகள் தவிர, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கான பதிவு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலம் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான பதிவு ஆகியவற்றுக்கான அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன.
சுய தொழில்கள் தொடங்க ஆா்வம் உள்ள இளைஞா்கள், இளம்பெண்களுக்காக மாவட்ட தொழில் மையத்தின் ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் சாா்பில் வங்கிக் கடன் குறித்து வழிகாட்டும் அரங்குகளும் அமைக்கப்பட உள்ளன.
முகாமில் பங்கேற்க விரும்புபவா்களுக்கு முன்பதிவு கட்டாயம். ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ அல்லது 0424 2275860, 9499055942 என்ற தொலைபேசி எண்கள் மூலமோ முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.