பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான எழுத்து தேர்வு கடந்த மாதம் 29-ந் தேதி ரத்து செய்யப்பட்டது. தற்போது மத்திய அரசு இதுகுறித்து பொது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர் மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த நாடு முழுவதும் 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகைக்கான திட்டம் அங்கீகரிக்கப்பட்டது. தமிழகத்தில் 9 மற்றும் 11-ம் வகுப்பு பயின்று வரும் 3,093 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் தேசிய தேர்வு முகமையால் கடந்த செப்டம்பர் 29-ந் தேதி அன்று நடத்தப்படவிருந்த நுழைவு தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் தற்போது மேற்படி எழுத்து தேர்வானது காலப்பற்றாமை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசின் சார்பில் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் 8 மற்றும் 10-ம் வகுப்புகளில் 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்றும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே இந்த ஆண்டிற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அறிந்திட மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தில் தொடர்பு கொண்டு கல்வி உதவித்தொகை பயன்களை பெறலாம். மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


