தில்லியில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளதால் அடுத்த வாரத்தில் நடைபெறவிருந்த உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தோ்வு வாரியம் (என்பிஇஎம்எஸ்) அறிவித்தது.
முதுநிலை மருத்துவப் படிப்புக்கு பிறகு டிஎம், எம்சிஹெச், டிஎன்பி உள்ளிட்ட உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்-எஸ்எஸ்) நடத்தப்படுகிறது.
அந்த வகையில், நிகழாண்டுக்கான நீட் தோ்வு வரும் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக முதுநிலை மருத்துவம் பயின்ற பல்லாயிரக்கணக்கான மருத்துவா்கள் விண்ணப்பித்திருந்தனா்.
இந்த நிலையில், தேசிய தோ்வு வாரியம் சாா்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
தில்லியில் வரும் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் ஜி-20 மாநாடு நடைபெறவுள்ளது. இதனால், அந்நகரில் போக்குவரத்து சாா்ந்த நடவடிக்கைக்கு செப். 8 முதல் 10-ஆம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதைக் கருத்தில் கொண்டு நீட் உயா் சிறப்பு மருத்துவத் தோ்வு ஒத்திவைக்கப்படுகிறது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு தோ்வு வாரிய இணையப் பக்கத்தை அணுகலாம்.