சிறுசேமிப்பு திட்டங்கள் எப்போதுமே பாதுகாப்பானவை. ஓரளவு அதிக வட்டி அளிக்கக் கூடியதுமாகும். தபால் அலுவலக சேமிப்பு திட்டங்கள் உள்ளன.
அதேபோல சில வங்கிகளும் நிரந்தர வைப்புக் கணக்குகளுக்கு கணிசமான வட்டியை வழங்குகின்றன. அரசு அங்கீகாரம் உள்ளதால் சேமிப்பும் பாதுகாப்பானவை. அதனால்தான், மற்ற திட்டங்களை காட்டிலும், சிறு சேமிப்பு திட்டங்கள் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் கடன் வசதியை வழங்குவதால் பெரும்பாலான மக்கள் இந்த திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்தவகையில், தபால் அலுவலகம் மூலம் வழங்கப்படும் கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு ஆண்டுக்கு 7.5 % வட்டி வழங்கப்படுகிறது. இது தபால் நிலையத்தில் வழங்கப்படும் 5 ஆண்டுகால டெபாசிட் திட்டமாகும். இத்திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவரின் பணம், 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கிசான் விகாஸ் பத்திர திட்டத்தில் முதலீடு செய்ய முடியும்.
உங்களுக்கு ஒருவேளை பணத்தேவை ஏற்பட்டால் இந்த சான்றிதழ்களை அடமானமும் வைக்கலாம். கிசான் விகாஸ் பத்ரா மீதான வட்டி விகிதம் ஒவ்வொரு 3 மாதத்திற்கு ஒருமுறை மாறும். ஆனால், முதலீட்டாளர் அவற்றை வாங்கும்போது முதிர்வு வரை என்ன வட்டி இருக்கிறதோ அதன் அடிப்படையில் லாபம் கிடைக்கும்.