இல்லம் தேடிக் கல்வித் திட்டம் தன்னார்வலர்களுக்கு கல்வித் துறை அழைப்பு இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் இணைந்து மாணவர்களுக்கு கல்விச் சேவையாற்ற தன்னார்வலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு: இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பயிற்சிப் பணிமனை, விழிப்புணர்வு கலை பயணம், தன்னார்வலர்களுக்கான இணையதளத்தை துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திங்கள்கிழமை தொடங்கி வைத்துள்ளார். இந்தத் திட்டத்தின்படி 1 முதல் 8 வகுப்பு வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி நேரத்துக்குப் பின்னர் அவர்கள் வசிப்பிடத்திற்கு அருகில் சிறு குழுவாக ஒருங்கிணைத்து கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்தத் திட்டத்தில் சேவையாற்ற விருப்பமுள்ள 38 மாவட்டங்களில் உள்ள தன்னார்வலர்கள் அனைவரும் தங்கள் விவரங்களை illamthedikalvi.tnschools.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், கணினி மற்றும் ஸ்மார்ட்போன் மூலமாகவும் மற்றும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலமாகவும் பதிவு செய்து கொள்ளலாம். இலச்சினை வடிவமைப்புப் போட்டி: இந்தத் திட்டத்தின் நோக்கம், செயல்பாடுகள் அனைத்தையும் நகர்ப்புற, கிராமப்புற மக்களிடையே கொண்டு சேர்ப்பது அவசியமாகும். அதனை கருத்தில் கொண்டு இல்லம் தேடிக்கல்வித் திட்டத்துக்கான இலச்சினை மக்கள் பங்கேற்புடன் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக இலச்சினை (logo with tag line) உருவாக்கும் போட்டி நடத்தப்படவுள்ளது. இதில் அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள், ஓய்வு பெற்ற ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம். வயது வரம்பு இல்லை.போட்டியாளர்கள் தங்களின் இறுதி படைப்பினை illamthedikalvi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் அக்.24-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். போட்டியாளர்களால் தயாரித்து வழங்கப்படும் இலச்சினை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்தால் இறுதி செய்யப்படும். சிறந்த மற்றும் பொது மக்களுக்கு எளிதில் புரிந்திடும் வகையிலான சின்னத்தை உருவாக்கும் ஒரு வெற்றியாளருக்கு ரூ.25,000 பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


